Thursday, May 7, 2026 12:17 pm
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் மற்றும் அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஹொரணையில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிதி அமைச்சின் செயலாளர் ஒருவரின் செயற்பாடுகளினால் 80 கோடி ரூபாவிற்கும் அதிகமான மக்கள் பணம் மாயமாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று டொலரின் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த இழப்பின் பெறுமதி இன்னும் பல மடங்காக இருக்கலாம் எனவும், இவ்வளவு பெரிய தொகை அள்ளுண்டிருக்கையில் நிதி அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி, நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியன இன்னும் உறக்கத்தில் இருப்பது வேடிக்கையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தை ‘ஹேக்கர்களின் அரசாங்கம்’ என வர்ணித்த நாமல் ராஜபக்ஷ, நிலக்கரி இறக்குமதி ஊழல், தனியார் வங்கி ஒன்றில் 13 பில்லியன் ரூபா திருடப்பட்டமை, தபால் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் நிதி தவறான கணக்குகளுக்கு மாற்றப்பட்டமை மற்றும் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் மாயமாகியுள்ளமை போன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.
பழைய ‘பிக்பொக்கெட்’ முறையைத் தாண்டி இப்போது அரசாங்கம் அதிநவீன ‘ஹேக்கர்’ முறையூடாக மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், ஜே.வி.பி உள்ளிட்ட தரப்பினரின் நிகழ்ச்சி நிரல்கள் எவ்வாறாக இருந்தாலும், இலங்கையை மீண்டும் பிரிக்கவோ அல்லது பயங்கரவாதத்திற்கு இடமளிக்கவோ ஒருபோதும் இடமில்லை என்றார்.
எயார்பஸ் விவகாரத்தில் ராஜபக்ஷக்கள் மீது பழி சுமத்தப்பட்ட போதிலும், தற்போது அதன் பின்னணியில் இருப்பவர்கள் ‘பெலவத்தை’ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது அம்பலமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் போக்குவரத்துத் துறை குறித்துக் கருத்து வெளியிட்ட அவர், மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் நாட்டை நகர்த்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று புகையிரதத்தின் வேகத்தை 20 கிலோமீட்டராக குறைத்துள்ளதாகக் கேலி செய்தார். மஹிந்த ராஜபக்ஷவின் பின்னர் புகையிரத பாதைகளை புனரமைக்க எந்தவொரு உருப்படியான திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், மழையினால் சேதமடைந்த பாதைகளைக் கூட திருத்த முடியாத ஒரு அரசாங்கமே இன்று உள்ளது எனவும் அவர் சாடினார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஊழல்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடுகள் செய்யுமளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் நாமல் ராஜபக்ஷ தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

