Friday, April 24, 2026 10:35 am
கனேடிய பொலிஸார் காட்டிய அலட்சியமே உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் என குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் பலாலியைச் சேர்ந்தவரும், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவருமான 30 வயதுடைய (றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்தநபர் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி மாலை Queen street மற்றும் Kenned road சந்திப்பிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது திடீரென மயங்கி விழுந்ததைக் கண்ட பேருந்து சாரதி வழங்கிய தகவலின் பேரில் அங்கு வந்த பீல் பிராந்திய பொலிஸார் ,மயக்க நிலையில் இருந்த கெனடியை விசாரணை செய்துள்ளனர்.
இதன்போது அவர் மதுபோதையில் இருப்பதாகத் தவறாகக் கருதிய பொலிஸார், அவருக்கு அபராதச் சீட்டு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும்,அவர் மதுபோதையில் இருப்பதாகத் தகவல் வழங்கப்பட்டதால் முறையான அவசர சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனையில் கெனடியின் உடலில் மதுவின் தாக்கம் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுமூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாகவே (Brain hemorrhage) அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், நீண்ட நேரத் தாமதத்தின் பின் வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மரணத்திற்கு முன் உடல் உறுப்புத் தானத்திற்கு ஒப்புதல் அளித்திருந்த கெனடி, தனது மறைவின் ஊடாக ஆறு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொலிஸாரின் முதற்கட்டத் தகவல் தவறானது என்பதை மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தியதை அடுத்து, தாம் வழங்கிய அபராதம் தவறானது எனப் பீல் பிராந்திய பொலிஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தற்போது உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

