Tuesday, April 21, 2026 11:48 am
உயிர்த்த ஞாயிறு என்றால் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பற்றிய நினைவுகள் வருமிடத்து தற்போது குண்டு வெடிப்பு சம்பவமும் அதன் அதிர்வுகளுமே கண் முன் வந்து செல்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் ஏழு ஆண்டுகள் ஆகின்றன.
2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு ஆராதனையின் போது 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புகளில் 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் தீவிரவாதக் குழுவால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த ஒருங்கிணைந்த தாக்குதலில் 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

2019 ஏப்ரல் 21 காலை 08.30 முதல் 09.15 மணி வரை இந்த தாக்குதல்கள் நடந்தன. இலங்கையின் முக்கிய நகரங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மற்றும் கொழும்பின் முன்னணி ஹோட்டல்களான ஷாங்ரி லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பரி போன்ற பகுதிகள் தாக்குதலின் போது குறிவைக்கப்பட்டன.
269 பேர் உயிரிழந்த நிலையில் இதில் 45-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அடங்குவர். இந்த குண்டு வெடிப்பு இலங்கை உட்பட சர்வதேச அளவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2017 ஆம் ஆண்டிலிருந்தே திட்டமிடப்பட்ட ஒரு சதித்திட்டம் இது என விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு நாட்டில் இனங்களுக்கு இடையிலான அமைதியின்மை ஏற்பட்டது. பல புதிய புதிய கட்டுப்பாடுகளை அரசாங்கம் கொண்டு வந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் பல முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இத்தாக்குதலின் சூத்திரதாரிகள் மற்றும் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிய பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த பயங்கரவாத தாக்குதல் இலங்கையின் பாதுகாப்பு மற்றும் சமூக கட்டமைப்பில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சோகமான நிகழ்வாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதித்தேடலை 7 ஆண்டுகள் தாண்டியும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
தாக்குதலை தாண்டிய மரணங்கள், தாக்குதலுக்கு முன்னர் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் போன்ற அறிக்கைகள் புதிய அதிர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளன. மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போது கூட கண்டிராத வகையிலான அதிர்ச்சியிலும் பயங்கரத்திலும் முழு நாட்டையும் ஆழ்த்திய சம்பவமாக 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை கூறலாம்.
மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஆடம்பர ஹோட்டல்களிலும் தற்கொலைக் குண்டுதாரிகளினால் ஒரே நேரத்தில் ஒருங்கிசைவான முறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. ஒரு குடும்பத்தையே இழந்த உறவுகள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், இலங்கையின் அழகை அனுபவிக்க வந்த வெளிநாட்டவர்கள் என உயிரிழப்புகள் பதிவானது.
சம்பவத்திற்கு அடுத்தடுத்து பதவிக்கு வந்த ஜனாதிபதிகளின் கீழான அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்ற உண்மையை வெளிப்படுத்தவில்லை. இதுவரையில் அந்த விடயத்தில் உயர்நீதிமன்றம் மாத்திரமே சிறந்த பணியை செய்திருக்கிறது எனலாம்.
உண்மையை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் உகந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் கத்தோலிக்க திருச்சபையும் வேறு குடிமக்களும் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மீறல் வழக்கொன்றை அடுத்தே அது நடந்தது.
விசாரணை அறிக்கைகளை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், நான்கு சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளும் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம் பொறுப்பை அலட்சியம் செய்ததாக அவர்களை குற்றவாளிகளாகக் கண்டது.
வழமைக்கு மாறான அரசியல் நிகழ்ச்சித் திட்டத்துக்காக கிறிஸ்தவர்கள் உட்பட பொதுமக்களும் பலிக்கடாவாக்கப்பட்டார்கள் என்ற காரணமாகத்தான் உண்மையை கண்டறிந்து உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் கார்டினல் மல்கம் ரஞ்சித் மிகவும் உறுதியாக இருக்கிறார் .

முழு உலகையுமே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைவதனை முன்னிட்டு உயிரிழந்தவர்களுக்கான 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நாடு தழுவிய ரீதியில் உணர்வுபூர்வமாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

