Sunday, April 12, 2026 4:58 am
வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த குடுவைப்பானைகள் (Torpedo Jar) – பழந்தமிழரின் பன்னாட்டு வணிகத்துக்கான மற்றொரு சான்று.
வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வானது நடைபெற்று சென்றாண்டு மே மாதம்(2025 மே) நிறைவடைந்திருந்தமை தெரிந்ததே! அப்போது கிடைத்த குடுவை வடிவப் பானையோடுகள் இப்போது ஆவணப்படுத்தப்பட்டு, அறிக்கை வடிவம் பெற்றுள்ள நிலையில், இச் செய்தியினையும் படங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார். இத்தகைய குடுவைப்பானைகள் (Torpedo jar) தமிழ்நாடு உரோமப் பேரரசுடன் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கொண்டிருந்த வணிகத் தொடர்பினை எடுத்துக்காட்டும் மற்றொரு முகன்மையான சான்றாக அமைந்துள்ளது. பொதுவாக இத்தகைய குடுவைகள் ‘முந்திரிச்சாறு’ போன்ற மது வகைகளை தமிழ்நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டவை.
“யவனர், நன்கலம் தந்த தண்கமழ் தேறல்” (புறநானூறு 56:18) என சங்க இலக்கியம் இறக்குமதியான மதுவினைப் பாடும், இத்தகைய தேறலினைக் (மதுவினை) கப்பலில் எடுத்த வருவதற்கு இத்தகைய குடுவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும்.
வெம்பக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) எனும் இடமானது ‘வைப்பாறு’ எனும் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த வைப்பாறு சேரளத்தில் (கேரளத்தில்) தொடங்கி, தேனி ஊடாக, விருதுநகர் மாவட்டத்தில் பாயும் ஆறாகும். எனவே இக் கண்டறிதலானது பன்னாட்டு வணிகத் தொடர்பினையும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட, தொன்மை மிகுந்த ‘தமிழ் வணிகப் பெருவழி’யினையும் கண்டறிவதற்கான வழியினை வகுத்துள்ளது. எதிர்கால ஆய்வுகள் தமிழரின் வணிகம் பற்றிய புதிய பல தரவுகளைத் தரும் என உறுதியாக நம்பலாம்.

