Wednesday, April 1, 2026 12:55 pm
தமது நாடுகளில் நடைபெறும் மோதல்களால் அந்தந்த நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்திப்பது வழமையான ஒன்றே. எங்கோ ஒரு தொலைவில் உள்ள இஸ்ரேல், அமெரிக்க, ஈரான் மோதல்களால் இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலையேற்றம் மேல்நிலை மக்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனடிப்படையில் இன்று ஏப்ரல் 1ம் திகதி நாட்டில் பல அதிகரிப்புக்கள் பதிவாகின்றன. இலங்கையில் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், மத்திய கிழக்கு போர்ச்சூழல் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக மின்சாரக் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படுகிறது.
இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த திருத்தத்தின் கீழ் 0 – 30 அலகுகளுக்கு 4.3% வரை கட்டண உயர்வு அதிகரிக்கப்படுகிறது. இதற்கமைய 15 ரூபாய் மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டு மாதாந்தம் 45 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 61 – 91 அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மாதாந்த 120 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 91 – 120 அலகுகளுக்கு மின்சாரக் கட்டணம் 7.1% இனால் அதிகரிக்கப்பட்டு மாதக் கட்டணம் 420 ரூபாவினால் உயரும். 180 அலகுகளுக்கு மேல் இந்த கட்டத்திற்கு அதிகப்படியான கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 180 அலகுகளுக்கு மேல் மின்சாரக் கட்டணம் 25% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாதாந்த மின்சார நுகர்வு 180 அலகுகளுக்குக் குறைவாகக் காணப்படும் மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டண உயர்வு காரணமாக இன்று முதல் உணவகங்களில் ரைஸ் மற்றும் கொத்து பொதியொன்றின் விலை ரூ. 30 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிற்றுண்டிகளின் விலை ரூ. 10 ஆல் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கப் பால் தேநீர் அல்லது சாதாரண தேநீர் விலை ரூ. 5 ஆல் உயர்ந்துள்ளது.
இதேவேளை இன்று முதல் எரிபொருள் விநியோகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றை/இரட்டை எண் முறைமை தற்காலிகமாக மாற்றப்பட்டு, அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் விநியோகம் செய்ய Ceylon Petroleum Corporation தீர்மானித்துள்ளது.
ஆனாலும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் இந்நிலை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டால் அனைத்து நாடுகளிலும் பொருட்களின் மீதான விலை உயர்வுகள் என்பது தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகவே காணப்படும்.
இதேவேளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக பல தடவைகள் தனது சமூகவலைத்தளப் பக்கங்களில் குறிப்பிட்டாலும் அதனை மறுத்துவந்த ஈரான், நேற்றைய தினம் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ஹோர்மூஸ் நீரிணையை கைப்பற்ற வேண்டும் என்கின்ற இலக்கில் அமெரிக்கா உறுதியாகவுள்ள நிலையில், ஈரானும் ஹோர்மூஸ் நீரிணையை விட்டுக்கொடுக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ விடாது தமது இறையாண்மையை நிலைநாட்டி வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரானிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றால் அதன் தாக்கம் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்படுமா? இல்லையெனில் எதிர்பாராத அளவிற்கு போர் உச்சம் பெறுமா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

