Tuesday, March 10, 2026 4:23 pm
ஈரானிய வீராங்கனைகள் ஐவருக்கு அவுஸ்திரேலியா அரசு அடைக்கலம் வழங்கியுள்ளது.
குயின்ஸ்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய காற்பந்து கூட்டமைப்பின் 2026 ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற ஈரான் தேசிய பெண் காற்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகளுக்கே இவ்வாறு அவுஸ்திரேலியா விசா வழங்கி தஞ்சம் அளித்துள்ளது.
தென் கொரியாவுக்கு எதிரான முதல் போட்டியின் போது, ஈரான் நாட்டின் தேசிய கீதத்தைப் பாடாமல் வீராங்கனைகள் மௌனம் காத்ததினால் அவர்கள் “யுத்த கால துரோகிகள்” என்றும் விமர்சிக்கப்பட்டனர். அவர்கள் தாயகம் திரும்பினால் கடும் தண்டனைக்கு உள்ளாகலாம் என்ற அச்சம் எழுந்தது.
ஈரான் பெண்கள் காற்பந்து அணியின் தலைவி உள்ளிட்ட ஐந்து வீராங்கனைகள் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இது குறித்து அவுஸ்திரேலிய பிரதமருடன் உரையாடியதன் விளைவாக ஐந்து பெண்களுக்கும் தஞ்சம் அளிக்கப்பட்டது.
சில வீராங்கனைகள் தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்புக் கருதி தாயகம் திரும்ப விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

