Monday, March 2, 2026 2:02 pm
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்திலேயே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டும் எனவும், தற்போது நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் QR முறையைப் பயன்படுத்த வேண்டிய எவ்வித அவசியமும் இல்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இன்று வழமை போன்று எரிபொருள் விநியோகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், காலை 9.45 மணி வரை 29 இலட்சத்து 25 ஆயிரத்து 349 லீற்றர் டீசலும், 29 இலட்சத்து 4 ஆயிரம் லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார். நேற்று மாத்திரம் 30 இலட்சத்து 81 ஆயிரத்து 349 லீற்றர் டீசலும், 39 இலட்சத்து 20 ஆயிரத்து 400 லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அனுமதிப்பத்திரமின்றி வீடுகளில் எரிபொருளைப் பதுக்கி வைப்பது சட்டவிரோதமானதும் ஆபத்தானதுமான செயலாகும் எனவும், அது தொடர்பில் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் டி.ஜே. ராஜகருணா இதன்போது தெரிவித்தார். இது தொடர்பில் நேற்று பொலிஸாரால் சிலர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

