Saturday, February 28, 2026 10:28 pm
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு ஈரான் மீது தாக்குதல் நடத்த துவங்கியுள்ளதாக வீடியோ வாயிலாக தெரிவித்துள்ள பின்பு, ஈரானுக்கு எதிரான சமீபத்திய ராணுவ தாக்குதல் குறித்து முதல் முறையாக பேசியுள்ளார். “எனக்கு வேண்டியது மக்களுக்கு சுதந்திரம் மட்டுமே. அமெரிக்கா பாதுகாப்பான நாடாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். இது அவரது ‘Truth Social’ பக்கத்தில் வெளியிட்ட வீடியோவிலும், ‘வாஷிங்டன் போஸ்ட்’ பேட்டியிலும் தெரிவித்தார்.
ஆனால் இந்த தாக்குதல் அமெரிக்காவில் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. பல அரசியல்வாதிகள் இது சட்டவிரோதமானது என்றும், அமெரிக்க அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக செனட்டர் எட்வர்ட் ஜே.மார்கி, “காங்கிரஸ் அனுமதி இல்லாமல் இராணுவ நடவடிக்கை செய்வது தவறு” என்று கடுமையாக விமர்சித்தார். இது அமெரிக்க படையினருக்கும் பொதுமக்களுக்கும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.
ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை ட்ரம்ப் மிகைப்படுத்தி கூறுவதாகவும், ‘Operation Midnight Hammer’ என்ற தாக்குதலில் ஈரான் அணு திட்டம் முழுமையாக அழிக்கப்பட்டது என்பதற்கு எவ்விதமான ஆதாரம் இல்லை என்றும் மார்கி குற்றம்சாட்டினார்.
இதேவேளையில் ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தாமஸ் மாசி கூட இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “இந்த போரை நான் ஆதரிக்கவில்லை. இது ‘America First’ கொள்கைக்கு எதிரானது” என்று அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. “மக்களுக்கு சுதந்திரம்” என்று கூறி ஈரான் மக்களை தூண்டியுள்ள நிலையில், அமெரிக்க அரசியலமைப்பு விதிகளை ட்ரம்ப் மீறியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

