Monday, February 16, 2026 12:16 pm
கடந்த ஓரிரு தினங்களாக ஊடகங்களிலும் சரி பொதுவான உரையாடல்களிலும் சரி பெரும்பாலானவர்களின் முக்கிய விவாதமாக 2026ம் ஆண்டு உலகக்கிண்ண ரி20 போட்டியில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி காணப்பட்டது என்று கூறுவது மிகவும் பொருத்தமான ஒன்றே.
கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து இருந்த ஒரு போட்டித்தொடராக இந்த போட்டித் தொடர் காணப்பட்டது. வெறுமனே இது ஒரு போட்டி என்று மட்டுமல்லாது இரண்டு நாட்டு போர் போன்றே பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் கடுமையான போட்டித்தன்மையை ஏற்படுத்தக்கூடியதும் பரபரப்பில் ஆழ்த்தக்கூடியதுமான இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு மின்னொளியில் ஆரம்பமானது.
இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் உள்நாட்டு பிரச்சினை காரணமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறாமல் போய்விடுமோ என இரண்டு நாடுகளினதும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் முழு உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஏங்கிக்கொண்டிருந்தனர்.
இந்த பரபரப்பான போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரடியாகவும், கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் கண்டுகளித்தனர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த வருட ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் அவர்களது இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற போட்டி இரண்டு அணிகளுக்கும் தீர்மானம் மிக்கதாக அமையும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்தது.
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும் சல்மான் அலி அகா தலைமையிலான பாகிஸ்தான் அணியும சமபலம் வாய்ந்தவை. இரண்டு அணிகளிலும் திறமையான அதிரடிக்குப் பெயர் பெற்ற வீரர்களும், பந்துவீச்சில் சாதிக்கக்கூடியவர்களும் இடம்பெறுவதால் போட்டி பரபரப்பான முடிவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பட்டது.
நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அலி அகா களத்தடுப்பை தெரிவுசெய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையாதபோதிலும் இஷான் கிஷானின் அதிரடி அரைச் சதத்தின் உதவியுடன் இந்தியா கணிசமான மொத்த எண்ணிக்கையைக் குவித்தது. அபிஷேக் ஷர்மா ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்த பின்னர் இஷான் கிஷான், திலக் வர்மா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டெடுத்தனர்.
இஷான் கிஷான் 77 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த பின்னர் இந்தியாவின் ஓட்டவேகம் சற்று குறைந்தது என்றே சொல்லலாம். திலக் வர்மா 25 ஓட்டங்களும், அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் 32 ஓட்டங்களும், கடைசி ஓவரில் ஷிவம் டுபே 27 ஓட்டத்துடன் ரன் அவுட் ஆனதுடன் கடைசிப் பந்தில் அக்சார் பட்டேல் ஓட்டம் பெறாமல் வெளியேறினார். பந்துவீச்சில் சய்ம் அயூப் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 18 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
நான்கு வீரர்களைத் தவிர வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை. உஸ்மான் கான் 44 ஓட்டங்களைப் பெற்றார். ஷஹீன் ஷா அப்றிடி ஆட்டம் இழக்காமல் 23 ஓட்டங்களையும், ஷதாப் கான் 14 ஓட்டங்களையும், பாஹீம் அஷ்ரப் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், ஜஸ்ப்ரிட் பும்ரா 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், வருண் சக்ரவர்த்தி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையும், அக்சார் பட்டேல் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதனால் 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2026 ஐசிசி டி20 உலகக் கிண்ணத்தில் சூப்பர் 8 இடத்தைப் பிடித்தது. போட்டியின் முன்னதாகவும், நாணய சுழற்சியின் போதும், போட்டியின் பின்னரும் இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ்வும் பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் ஆகாவும் கைகுலுக்கவில்லை. இந்தச் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைப் பதிவு செய்திருந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இந்தியாவின் கை மேலோங்கியிருப்பதை நேற்றைய வெற்றி மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது. பாகிஸ்தானுடன் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஒன்பது தடவைககள் நேருக்கு நேர் விளையாடிய இந்தியா தனது 8ஆவது வெற்றியை நேற்று ஈட்டியதுடன், பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ரி20 கிரிக்கெட் வரலாற்றில் நேற்றைய வெற்றியுடன் 17 – 3 ஆட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
பாகிஸ்தான் அடுத்து நமீபியாவை எதிர்கொள்கிறது. இந்தியா பெப்ரவரி 18 அன்று நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

