Saturday, February 14, 2026 9:12 pm
காரைக்காலில் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பறந்து வந்த ட்ரோனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களால் அந்த ட்ரோனை அமித்ஷாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த என்எஸ்ஜி வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். டிரோன் பறக்கவிட்ட நபரைக் கைது செய்த பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று புதுச்சேரியின் காரைக்காலில் உள்ள பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
ட்ரோன் பறக்கவிட்ட நபரின் பெயர் லோகேஷ் என்பதும், அவர் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி அமித்ஷாவின் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தின் அருகே உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
முன்னதாக அமித்ஷா வருகையையொட்டி காரைக்கால் மாவட்ட எல்லைக்குள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.

