Thursday, February 12, 2026 12:21 pm
இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை மற்றும் புகையிரத மோதல்களைக் குறைக்கும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட புகையிரதங்களில் அதிநவீன “உணர்திறன் கெமரா” (Thermal Camera) கட்டமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் அமைச்சு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுத்த இந்த விசேட திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நேற்று தெமட்டகொட புகையிரத நிலையத்தில் வைத்து இந்த கெமராக்கள் பொருத்தப்பட்டன.
ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்த கெமரா கட்டமைப்பு ‘புலதிசி’ புகையிரதத்தில் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் இயக்கப்படவுள்ளது.
இந்தச் சோதனையின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் இந்தக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சின் ஆலோசகர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.
புகையிரத நிலைய ஊழியர்களுக்கு இது தொடர்பான விசேட பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தன்னார்வ சுற்றுச்சூழல் அமைப்புகளையும் இதில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சாரதிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் எச்சரிக்கைப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளதோடு மோதல்களைத் தவிர்க்கும் நோக்கில் புகையிரத நேர அட்டவணைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

