Sunday, February 8, 2026 8:43 pm
ரி20 உலகக் கிண்ணத் தொடரின் 5வது லீக் போட்டியில், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி, நேபாள அணியிடம் தோல்வியின் விளிம்பு வரை சென்று, கடைசி ஓவரில் நூலிழையில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த த்ரில்லர் போட்டியில், கடைசி ஓவரில் சாம் கரனின் துல்லியமான யார்க்கர்கள் இங்கிலாந்து அணியைக் காப்பாற்றின.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்து 184 ஒட்டங்கள் எடுத்தது. 185 என்ற வெற்றி இலக்கைத்துரத்திய நேபாளம் 20 ஓவர்களில் 6 விக்கெற்களை இழந்து 180 ஓட்டங்கள் எடுத்து 4 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஜேக்கப் பெத்தல் 55 ,ஹாரி புரூக் 53 ஓட்டங்கள் எடுத்தனர்.
185 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய நேபாள அணி, ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்குச் சவால் அளித்தது. திபேந்திர சிங் ஐரி44,கப்டன் ரோகித் பவுடல் ஓட்டங்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
கடைசி 3 ஓவர்களில் நேபாள வெற்றிக்கு 46 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 18வது ஓவரை வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 22 ஓட்டங்களை வாரி வழங்கினார். அந்த ஓவரில் லோகேஷ் பாம் இரண்டு இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிட்டு இங்கிலாந்தை மிரள வைத்தார். 19வது ஓவரை வீசிய லூக் வுட், 14 ஓட்டங்கள் கொடுத்தாலும் குல்சன் ஜாவை அவுட்டாக்கி சற்று நெருக்கடி கொடுத்தார்.
கடைசி ஓவரில் நேபாள வெற்றிக்கு 10 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டன. இங்கிலாந்து கப்டன் பட்லர் பந்தை சாம் கரனிடம் கொடுத்தார்.
முதல் பந்து: சாம் கரன் யார்க்கரை வீச, லோகேஷ் பாம் திணறினார். ஓட்டம் இல்லை.
இரண்டாவது பந்து: மீண்டும் ஒரு யார்க்கர். லோகேஷ் பாம் பந்தைத் தொடக்கூட முடியவில்லை.
மூன்றாவது பந்து: ஒரு ஓட்டம் மட்டுமே கிடைத்தது.
நான்காவது பந்து: லோகேஷ் பாம் 2 ஓட்டங்கள் எடுத்தார்.
ஐந்தாவது பந்து: 7 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், சாம் கரன் மீண்டும் ஒரு துல்லியமான யார்க்கரை வீசினார். ஓட்டம் இல்லை.
கடைசி பந்து: ஒரு ஓட்டம்மட்டுமே கிடைத்தது.
இறுதியில் இங்கிலாந்து அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தைடைசி வரை பயமுறுத்திய நேபாள வீரர்களின் போராட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 4 ஓவர்கள் வீசி 27 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்திய சாம் கரன் இங்கிலாந்தின் ஹீரோவாக மாறினார்.

