Sunday, June 14, 2026 4:57 pm
அமெரிக்காவின் பாக்ஸ்பரோ மைதானத்தில் சனிக்கிழமை ஸ்காட்லாந்து ,ஹைட்டி ஆகியவற்றுகிடையேயான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்கொட்லாந்து அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. உலகக் கிண்ண வரலாற்றில் கடந்த 36 ஆண்டுகளில் ஸ்கொட்லாந்து பெறும் முதல் வெற்றியாகும்.
ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஸ்கொட்லாந்தின் நட்சத்திர வீரர் ஜான் மெக்கின் கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். 20 வயது இளம் வீரர் பென் கானன்-டோக் கொடுத்த அருமையான கிராஸைப் பயன்படுத்தி மெக்கின் இந்த கோலை அடித்தார்.
1998 ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் கிரெய்க் பர்லி கோல் அடித்ததற்குப் பிறகு (அதாவது 10,244 நாட்களுக்குப் பிறகு) உலகக் கிண்ண அரங்கில் ஸ்காட்லாந்து அடித்த முதல் கோல் இதுவாகும். மேலும், 1990ஆம் ஆண்டுக்கு பிறகு, அதாவது 36 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்து பெறும் முதல் வெற்றி இது என்பதால் மைதானத்தில் திரண்டிருந்த சுமார் 30,000 ஸ்கொட்லாந்து ரசிகர்கள் இக்கொண்டாட்டத்தில் திளைத்தனர்.
உலகத் தரவரிசையில் 83வது இடத்தில் உள்ள ஹைட்டி அணி 2வது பாதியில் ஸ்கொட்லாந்துக்கு கடும் சவாலளித்தது. குறிப்பாக ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஹைட்டியின் பிரான்ட்ஸ் டி பியரோட் தலையால் முட்டிய பந்து, ஸ்கொட்லாந்து கோல்கீப்பர் அங்குஸ் கன்னையும் தாண்டி நூலிழையில் வெளியேறியது. இதனால் ஸ்கொட்லாந்து அணி தப்பியது. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்கொட்லாந்து அபார வெற்றி பெற்றது.
முன்னதாக நடந்த குரூப் சி பிரிவின் மற்றொரு போட்டியில் பலம் வாய்ந்த பிறேஸில் , மொராக்கோ அணிகள் 1-1 என டிரா செய்தன. இதனால், குரூப் சி பிரிவில் 3 புள்ளிகளுடன் ஸ்கொட்லாந்து அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்ததாக வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணி மொராக்கோவை எதிர்கொள்ள உள்ளது.

