Saturday, August 29, 2026 5:23 am
வி.இ.குகநாதன்
கீழடி அகழாய்வில், அங்கு வாழ்ந்த மக்கள் இன்று தமிழ்நாட்டில் வாழும் தமிழர், ஈழத்தமிழர், பிற தென்னிந்தியர்கள் ஆகியோரின் முன்னோர் என நிறுவப்பட்டமை(டி.என்.ஏ ஒப்பீட்டாய்வு) தெரிந்ததே. அதே போன்று கீழடியில் வாழ்ந்த மக்களின் உணவுகளாக என்னென்ன இருந்தன என்பவையும் தெரிய வந்துள்ளன. அத்தகைய உணவுகள் பலவும் (/யாவும்) இன்றும் தமிழரின் உணவுகளாகவும் தொடர்வது வியப்பானதாகவுள்ளது. அதனைப் பற்றிச் சுருக்கமாக இப் பதிவில் பார்ப்போம்.
அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட பானைகள், தாழிகள் என்பனவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த எச்சங்களை ஆய்வு செய்ததன் மூலமே அவர்களின் உணவு முறை தெரிய வந்துள்ளது. கீழடி மக்களின் முகன்மையான உணவுகளாக இருந்தவை எனத் தெரியவந்துள்ளவற்றினை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
அரிசி
நெல்லரிசி என்பதே இன்றும் தமிழரின் முகன்மையான உணவாகும். சோறு உட்பட மற்றும் பல உணவு வகைகள் அரிசியினை மூலமாகக் கொண்டவையே! சோற்றுடன் சேர்ந்த இறைச்சிக்கறியினை ‘கறி சோறு’ என இன்றும் அழைக்கின்றோம். இதே சொல்லானது புறநானூற்றுப் பாடலில் இடம் பெறுகின்றது. (புறம் 14;12), இப்பாடலில் கபிலர் தனது உணவாகக் கறிசோறினைக் குறிப்பிடுகின்றார்.
” ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்து தொழில் அல்லது,
பிறிது தொழில் அறியா ஆகலின்”
புறநானூறு 14: 13-15
மேலுள்ள பாடலில் கறிசோறு உண்பதை விட வேறு தொழில் அறியேன் எனக் கபிலர் பாடுகின்றார்.
அதியமான் நெடுமான் அஞ்சி எனும் அரசன் தனக்கு இறைச்சிக் கறியுடனான சோற்றினை (அடிசில்) வெள்ளியாலான வெண் கலத்தில் உண்ணத் தந்தான் என ஔவை பாடுகின்றாள் (புறம்: 390:17), அந்த உணவு ‘அமிழ்தம்’ போன்று இருந்தது என ஔவை மேலும் சொல்கின்றாள். இன்றும் யாராவது கறிசோறு விருந்து படைத்து, அந்த உணவு சுவையாகவுமிருந்தால், நாம் உடனே ‘சாப்பாடு அமுதம் போலிருந்தது’ எனக் கூறுகின்றோம்தானே!
‘ஊன்துவை அடிசில்’ என்ற சொல்லாடலானது சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றில் இடம் பெற்றுள்ளன. இறைச்சி வேறு, சோறு வேறு எனப் பிரித்தறிய முடியாத வகையில் கலக்கப்பட்ட இந்த உணவானது இன்றைய ‘பிரியாணி’ உணவு போன்றது. இறைச்சியுடனான குழையல் சோறும் இத்தகைய உணவேயாகும்.
பல்வேறு வகையான சோறுகள் பற்றிச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஊன்சோறு, பாற்சோறு, செஞ்சோறு, வெண்சோறு, கொழுஞ்சோறு; இத்தகைய அனைத்து வகையான சோறு வகைகளுக்கும் தேவையான மூலப்பொருள்கள் பலவும் கீழடி-ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்துள்ளன. அன்று முதல் இன்று வரைச் சோறானது தமிழரின் முகன்மையான உணவாக இருந்து வருவது வியப்புக்குரியது.
இறைச்சி
இறைச்சி பழந் தமிழரின் உணவாக இருந்தமைக்கான சான்றுகளும் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. இறைச்சி எவ்வாறு சோற்றுடன் பின்னிப் பிணைந்து காணப்பட்டது என்பதற்கான சங்ககாலப் பாடல்கள் சிலவற்றினையும் ஏற்கனவே இப்பதிவில் பார்த்துள்ளோம். இங்கு இன்னொரு செய்தியினையும் குறிப்பிட்டாக வேண்டும். இறந்த முன்னோருக்கான படையல் பானைகளில், அதாவது முதுமக்கள் தாழியுடனான படையலில் இறைச்சி படைக்கப்பட்டிருப்பதற்கான கொழுப்புப் படிமச் சான்றுகள் வேதியல் முறையில் கண்டறியப்பட்டுள்ளன. இன்றும் இறப்பு நிகழ்ந்த வீடுகளில் நடைபெறும் ‘எட்டு’ எனப்படும் சடங்கில் (எட்டாம் நாள் சடங்கு ) இறைச்சி படைக்கப்படுவதனைக் காண்கின்றோம் { இறந்தவர் முன்பு புலால் உண்பவராக இருந்தால் எட்டாம் சடங்கில் இறைச்சிக்கறியும் படைக்கப்படும் }.
தினை
தினை எனும் சிறுகூலமும் தமிழரின் முகன்மையான உணவாக இருந்துள்ளது என அகழாய்வு முடிவுகள் சொல்லுகின்றன. தினை பற்றிய குறிப்புகள் பல சங்ககாலப் பாடல்களில் காணப்படுகின்றன. குறிப்பாகச் சொன்னால் குறிஞ்சி நில மக்களின் முகன்மையான உணவாகத் தினை இருந்துள்ளது. தினை குறித்த பல பாடல்களைச் சொல்லலாம் எனினும், விரிவஞ்சி புறநானூற்றுப் பாடலொன்றின் பின்வரும் வரிகளை மட்டும் பார்ப்போம்.
“கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையோடு
இந்நான் கல்லது உணவும் இல்லை”-புறநா. 335 : 4-6
மேலுள்ள வரிகளில் ‘வரகு, பெரிய கதிரையுடைய தினை, கொள், அவரை ஆகிய நான்கைத் தவிர வேறு சிறப்பான உணவுப்பொருட்களும் இல்லை’ என மாங்குடி கிழார் பாடுகின்றார்.இவ்வாறு நான்கு சிறுகூலங்களிலொன்றாகச் சொல்லப்படும் தினை உணவினைக் கீழடி அகழாய்வுச் சான்றுகளும் மெய்ப்பிக்கின்றன.
பால், எண்ணெய், நிலக்கடலை (கச்சான் ) போன்ற உணவுகளுக்குமான சான்றுகள் அகழாய்வில் கிடைத்துள்ளன. இன்றும் மேலே குறிப்பிடப்பட்ட உணவு வகைகள் யாவுமே தமிழரின் உணவில் இடம் பெற்றுள்ளன. ஆகா! எத்தகைய உணவுப் பண்பாட்டுத் தொடர்ச்சி! தொடருவோம்.

