Monday, October 26, 2026 4:56 pm
பிரான்ஸில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைவு மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக மக்கள் மீண்டும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அக்டோபர் 24 ஆம் திகதி நாட்டின் முக்கிய நகரங்களில் நடந்த இப்போராட்டங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து, பொலிஸாரால் சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பரிஸ், மார்சேய், லியோன், போர்டோ ,லீல் உள்ளிட்ட நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். பாரிஸில் பேரணி அமைதியாக தொடங்கியபோதிலும், பின்னிரவில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகளையும் நீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களையும் பொலிஸார் பயன்படுத்தினர்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உள்துறை அமைச்சர் லோரான் நூனெஸ் உத்தரவின் பேரில் சுமார் 70,000 பாதுகாப்பு பணியாளர்கள் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் சுமார் 4.1 லட்சம் முதல் 8 லட்சம் வரை மக்கள் பங்கேற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மோதல்களின் போது இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
ஆறு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் வரவுள்ள நிலையில், மேக்ரோன் அரசுக்கு இந்த போராட்டங்கள் பெரும் அரசியல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளன. மேலும் வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் பிரான்ஸில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

