Tuesday, September 8, 2026 10:41 am
கனடாவின் வர்த்தக ஜெட் விமான உற்பத்தியாளரான பாம்பார்டியர், அமெரிக்காவில் தனது விமானங்களை விற்பனை செய்வதற்குத் தடை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று அச்சுறுத்தினார். இது வாஷிங்டனுக்கும் ஒட்டாவாவிற்கும் இடையிலான வர்த்தகப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஒரு சமூக ஊடகப் பதிவில், பாம்பார்டியரின் தயாரிப்புகள் “போதுமான தரம் இல்லை” என்று ட்ரம்ப் விமர்சித்தார். மேலும், அந்நிறுவனம் அமெரிக்க வாடிக்கையாளர்கள், நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் சேவைகளை பெரிதும் சார்ந்துள்ளது என்றும், அதன் வருவாயில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை அமெரிக்காவிலிருந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அமெரிக்க வர்த்தக ஜெட் விமான உற்பத்தியாளரான கல்ஃப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட அமெரிக்க வங்கிகள் மற்றும் நிறுவனங்கள், கனடா சந்தையில் செயல்படுவதை கனடா கட்டுப்படுத்துவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். “அவர்கள் எங்கள் சந்தையை விரும்பினால், அவர்கள் இங்கேதான் உற்பத்தி செய்ய வேண்டும்,” என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கவும், அமெரிக்க விமானங்களில் பயணிக்கவும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் மற்றும் பிற பொருட்களை உட்கொள்ளவும் ட்ரம்ப் அமெரிக்கர்களை வலியுறுத்தினார்.
பாம்பார்டியர் மற்றும் கனடிய விமானங்களைக் குறிவைத்து இந்த ஆண்டு ட்ரம்ப் விடுத்த இரண்டாவது பெரிய அச்சுறுத்தல் இதுவாகும்.
ஜனவரி 29 ஆம் திகதி பாம்பார்டியரின் குளோபல் எக்ஸ்பிரஸ் ஜெட் விமானங்கள் மற்றும் கனடாவில் தயாரிக்கப்பட்ட பிற விமானங்களுக்கான சான்றிதழை அமெரிக்கா ரத்து செய்வதாக டிரம்ப் கூறினார். மேலும், கனடா பல கல்ஃப்ஸ்ட்ரீம் வணிக ஜெட் விமானங்களுக்கு சான்றிதழ் வழங்காவிட்டால், அமெரிக்காவிற்கு விற்கப்படும் விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அவர் அச்சுறுத்தினார்.
அமெரிக்கா-கனடா வர்த்தகப் பதட்டங்கள் அதிகரித்து வரும் வேளையில் இந்த சமீபத்திய அச்சுறுத்தல் வந்துள்ளது. ஓகஸ்ட் 22 ஆம் திகதி முதல் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனடியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்தது. இதற்குப் பதிலடியாக, கனடாவும் செவ்வாய்க்கிழமை முதல் அதே மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரி விதித்தது.

