Monday, August 10, 2026 8:32 am
அமெரிக்க ஆதரவுடைய காஸா அமைதித் திட்டத்தை நிராகரித்ததோடு , ஹமாஸ் அமைப்பு “உண்மையாகவே” நிராயுதபாணியாக்கப்படும் வரை இராணுவப் படைகள் திரும்பப் பெறப்படாது என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும் உறுதியளித்தார்.
அந்த சமாதானத் திட்டத்தை , “காஸாவில் உள்ள ஹமாஸ், பிற அனைத்து குழுக்களின் முழுமையான ஆயுதக் களைவுக்கான ஒரு வரலாற்று ஒப்பந்தம்” என்று கடந்த மாதம், ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டினார். அது தனது சர்வதேச ” சமாதான வாரியத்தால் ” பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் , “நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பை நோக்கிய ஒரு மகத்தான படி” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு வாரத்திற்கும் மேலாக அந்தத் திட்டத்தின் மீதான விமர்சனங்கள் படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாகத் தனது வலதுசாரி ஆதரவுத் தளத்திடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்த நெதன்யாகு, ஞாயிற்றுக்கிழமையன்று அதனை வெளிப்படையாக எதிர்த்தார்.
“15 அம்ச ஆவணத்தை இஸ்ரேல் நிராகரிக்கிறது,” என்று அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கூறினார். மேலும், “ஹமாஸ் முழுமையாக நிராயுதபாணியாக்கப்படும் வரை இராணுவம் எந்தப் படையையும் திரும்பப் பெறாது, நமது படைகளுக்கும் குடிமக்களுக்கும் எதிரான அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து முறியடிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அமைச்சரவை வாக்கெடுப்பை நடத்தவும், காஸா திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் தனது தீவிர வலதுசாரி கூட்டாளிகளிடமிருந்து அழைப்புகளை எதிர்கொண்டுள்ள நெதன்யாகு, தனது ஆட்சேபனைகள் குறித்து அமெரிக்காவுடன் இஸ்ரேல் பேசி வருவதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

