Tuesday, October 28, 2025 4:25 pm
ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும், மாணவர் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கும், பல்கலைக்கழக நிர்வாகம் தீர்வு காணவேண்டும் எனக் கோரி இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்விசாரா பணியாளர் வெற்றிடங்கள் 355 காணப்படுகின்ற போதிலும், 117 வெற்றிடங்களே நிர்வாகத்தினால் கோரப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சுற்றறிக்கைக்கு முரணாக தனியார் நிறுவனங்களூடாகவும் ஊழியர்கள் உள்வாங்கப்பட்டு சேவை ஒப்பந்தத்தினூடாக நியமனம் செய்யப்படுவது தவறு எனவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஏற்கனவே இந்த முறைகேடு தொடர்பாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் பல்கலைக்கழக பேரவைக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டும் அவை புறக்கணிக்கப்பட்டதால் இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

