பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், அஹமதியா சமூகத்தினர் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அகமதியா சமூகத்தினர் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடக் கூடாது என போலீசார் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். மீறிக் கொண்டாடினால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
பக்ரீத் பண்டிகை நாளை ஜூன் 7ம் திகதி கொண்டாடப்படுகிறது. இதற்காக உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். இருப்பினும், பாகிஸ்தான் நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தினர் பக்ரீத் கொண்டாட முடியாமல் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். ஏனென்றால் அங்குள்ள அரசே பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடத் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானில் வசிக்கும் 20 லட்சம் அஹமதியா மக்கள் நீண்ட காலமாகவே இதுபோல பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருவதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் 20 லட்சம் பேர் கொண்ட அஹமதியா சமூகம் நீண்ட காலமாகத் துன்புறுத்தப்பட்டு வருகிறது. 1974ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அஹமதியாக்கள்யாரும் முஸ்லிம்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. 1984 அவசரச் சட்டம் அகமதியாக்கள் இஸ்லாமிய மதச் சடங்குகளைப் பின்பற்றினால் அது குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டது. இஸ்லாமிய வாழ்த்துக்களைக் கூறுவது, அகமதியா வழிபாட்டுத் தலங்களை மசூதிகள் என்று அழைப்பது, குர்ஆனை ஓதுவது போன்ற செயல்களையும் குற்றம் என அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் இதுபோல அஹமதியாக்களுக்குதடை விதிப்பது இது முதல்முறை இல்லை. பல காலமாகவே பக்ரீத் சமயத்தில் இதுபோல தடை விதிப்பார்கள். கடந்த ஜூன் 2024இல் பாக். பஞ்சாபில் மட்டும் குர்பானி கொடுத்தாக மட்டும் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த மார்ச் 2024ல் குஷாப்பில் தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களின் சுமார் 100 அகமதியா கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டன.