Friday, April 10, 2026 3:48 pm
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், அமெரிக்கா ஈரான் ஆகியவற்றுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி பேச்சுவார்த்தை நாளை ஏப்ரல் 11 சனிக்கிழமை முதல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது. இந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு, இஸ்லாமாபாத் நகரம் தற்போது ஒரு பலத்த பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது.
பாராளுமன்றம், வெளிநாட்டு தூதரகங்கள் , முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள ‘ரெட் ஜோன்’ பகுதிக்குள் பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
நகரம் முழுவதும் ஆயுதம் ஏந்திய பொலிஸாரும் , ரேஞ்சர்ஸ் படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் இஸ்லாமாபாத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து 30 பேர் கொண்ட பாதுகாப்பு குழு ஏற்கனவே இஸ்லாமாபாத்துக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் பிரதிநிதிகள் , செய்தியாளர்களாகியோருக்கு ‘விஸா ஒன் அரைவல்’ வசதியை வழங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
விமான நிலையங்களில் இதற்காக சிறப்பு உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளின் ஒட்டுமொத்த பார்வையும் தற்போது இஸ்லாமாபாத்தை நோக்கியே உள்ளது.

