Friday, February 27, 2026 8:33 am
பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான் ஆகியவற்றுக்கு இடையே எல்லையில் மோதல் வெடித்துள்ளது. இரவோடு இரவாக பாகிஸ்தான் மீது திடீரென ஆப்கானிஸ்தான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. தலிபான் படைகள் நடத்திய தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எல்லையில் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானுக்குள் அத்து மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் அதற்குப் பதிலடியாக 26 ஆம் திகதி இரவு 8 மணிக்கு இந்த பதிலடி தாக்குதல் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரந்த் கோடு நெடுகிலும் உள்ள பக்ஷிகா, பக்ஷியா, கோஸ்ட், நங்கர்ஹார், குனார் மற்றும் நூரிஸ்தான் மாகாணங்களுக்கு அருகிலுள்ள கிழக்கு , தென்கிழக்குப் பகுதிகளில் ஒருங்கிணைந்த எதிர்த் தாக்குதல்களை நடத்தின. இந்த நான்கு மணி நேர சண்டையின் போது, இரண்டு பாகிஸ்தான் ராணுவத் தளங்கள் மற்றும் 19 ஸ்டேன்ககளை கைப்பற்றப்பட்டதாக ஆப்கான் அமைச்சு கூறியது. மேலும் நான்கு கூடுதல் ஸ்டேஷன்களில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தலிபானிடம் இருந்து இந்த அறிக்கை வந்த சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியுள்ளது. ஆப்கான் தலைநகர் காபூலில் அதிகாலையில் வெடிச்சத்தங்களும், போர் விமானங்களின் சத்தமும் கேட்டன. காபூல், கந்தஹார் ,பக்ஷியா ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல்கள் நடத்தியதாகத் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் குற்றம் சாட்டினார். பாகிஸ்தானின் கோழைத்தனமான ராணுவம் காபூல், கந்தஹார் , பக்ஷியாவின் சில பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்றும் அதிர்ஷ்டவசமாக, எந்தவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று முஜாஹித் தெரிவித்தார்.
பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கையில், 133 ஆப்கானிஸ்தான் தலிபான் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர், 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அதே நேரத்தில் காபூல், பாக்டியா,காந்தஹாரில் உள்ள இராணுவ இலக்குகளில் மேலும் உயிரிழப்புகள் மதிப்பிடப்பட்டுள்ளன.
இரண்டு கார்ப்ஸ் தலைமையகங்கள், மூன்று படைப்பிரிவு தலைமையகங்கள், இரண்டு வெடிமருந்து கிடங்குகள், ஒரு தளவாடத் தளம், மூன்று பட்டாலியன் தலைமையகம் மற்றும் இரண்டு துறை தலைமையகங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கூடுதலாக, 80 க்கும் மேற்பட்ட டாங்கிகள், பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் கவசப் பணியாளர்கள் கேரியர்கள் அழிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

