நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பருவமழையால் ஏற்பட்ட பேரழிவுகளில் மொத்தம் 43 பேர் உயிரிழந்ததாக அரசு நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் 38 பேர் நிலச்சரிவுகளிலும், மூன்று பேர் மின்னல் தாக்குதலிலும், இரண்டு பேர் வெள்ளத்திலும் உயிரிழந்ததாக தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“வெள்ளத்தில் நான்கு பேர் உட்பட ஐந்து பேர் காணவில்லை,” என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டது, பேரழிவுகளில் 12 பேர் காயமடைந்தனர் என்றுமறிவிக்கப்பட்டது.
கிழக்கு நேபாளத்தில் உள்ள இலம் மாவட்டத்தில் நிலச்சரிவுகளில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவுடன் நேபாள ராணுவ வீரர்கள் 28 வெவ்வேறு இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நாடு முழுவதும் நிலச்சரிவுகள், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான இந்து பண்டிகையான தஷைன் பண்டிகையின் போது நெடுஞ்சாலைகள்,வீதிகள் தடைபட்டுள்ளன.
காத்மாண்டு பள்ளத்தாக்கிற்குள் மற்றும் வெளியே வாகனப் போக்குவரத்துக்கு சனிக்கிழமை முதல் மூன்று நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்கள் சனிக்கிழமை இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தொடங்கப்பட்டன.