Thursday, January 8, 2026 12:36 pm
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்காதது ஏன் என்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர். மேலும் சல்லியர் படத்தை வெளியிட பிவிஆர் திரையரங்கம் மறுத்தது குறித்தும் அவர்கள் பேசியுள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து போது கூறியதாவது: தணிக்கை குழு என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தணிக்கை குழு நிறைய விதிகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் எங்களுக்கு நிறைய சிரமங்கள் உள்ளன.
பான் இந்தியா படங்களை அனைத்து மொழிகளிலும் சென்சார் செய்வதாக அறிவித்துள்ளார்கள். ஒரு சட்டத்தை கொண்டு வரும் போது ஆரம்பத்தில் சிரமப்பட வேண்டிய சூழல் உள்ளது. இது தயாரிப்பாளர்களுக்கு மட்டும் பிரச்சினை கிடையாது, இயக்குநர்களுக்கு நேரத்திற்கு முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. படங்களுக்கான புக்கிங் என்பது படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே ஓபன் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே புக்கிங் செய்ய முடியும். வெளிநாடுகளில் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால் 21 நாட்களுக்கு முன்பே படங்களுக்கு சென்சார் சான்றிதழ் பெற வேண்டியது அவசியம். ஒவ்வொரு நாடுக்கும் ஒவ்வொரு சட்டத்திட்டம் இருக்கிறது. அதனால் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் படங்களை வேகமாக முடித்து சென்சாருக்கு அனுப்ப கேட்கிறோம். ஒரு படம் என்றால் அதில் வரும் காட்சிகள் எந்தளவுக்கு சமுதாயத்தை பாதிக்கும் என்பதை பார்த்துதான் தணிக்கை சான்றிதழ் கொடுக்கிறார்கள்.
அப்படி ஏதாவது பிரச்சினை வரும் நிலையில் அதை நிறுத்தி வைக்கிறார்கள். இதனால் 100 சதவீதம் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு உள்ளது. இயக்குநர்களும் தயாரிப்பாளர்களுக்கான பாதிப்பை கருத்தில் கொண்டு அதை சரி செய்ய வேண்டும். ஜனநாயகனை பொருத்தமட்டில் தணிக்கை குழு அறிவுறுத்திய காட்சிகள் மாற்றப்பட்டும் ஏன் தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை தெரியாமல் நாங்கள் சொல்லக் கூடாது. ஆனால் இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய பாதிப்பு என்பதை மட்டும் நாங்கள் சொல்கிறோம். சினிமா துறைக்கே பிரச்சினை என்றால் மட்டுமே எங்கள் சங்கம் சார்பாக நாங்கள் பேசுவோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட படத்திற்கான பிரச்சினை குறித்து நாங்கள் பேச முடியாது. தமிழகத்தில் பிவிஆரை தவிர வேறு தியேட்டர்களே இல்லையா, சல்லியர் படத்தை ரிலீஸ் செய்ய! ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் உள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததால், ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

