Saturday, September 13, 2025 1:05 am
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய நண்பர் சார்லி கிர்க்கை அவரைச் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்றவர் டைலர் ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பின் நெருங்கிய நண்பரும், வலதுசாரி ஆதரவாளருமான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 31 வயதான சார்லி கிர்க், ‘டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ’ என்ற இளைஞர் அமைப்பின் இணை நிறுவனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியுமாகவும் இருந்தார். இவர் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். குறிப்பாக, கடந்த தேர்தலின் போது, டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்காக வாக்காளர்களை திரட்டியதில் முக்கிய பங்கு வகித்தார்.
நேற்று முன்தினம் உட்டா மாகாணத்தில் உள்ள வேலி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கிர்க்கை சுட்டதில், அவருடைய கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சார்லி கிர்க்கை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சார்லி கிரிக்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

