மறைந்த சுமித்ரா பெரிஸ் இயக்கி 1978 ஆம் ஆண்டு வெளியான கெஹெனு லாமாய் திரைப்படம் மே 17 ஆம் திகதி கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. புதிய தொழில்நுட்பத்தில் மீளமைக்கப்பட்ட இத்திரைப்பட காட்சிப்படுத்தல் இலங்கை சினிமா வரலாற்றில் ஒரு பெருமைமிக்க தருணத்தைக் குறிக்கிறது.
சாலே புனுவேலில் நடைபெற்ற இந்த விழாவில் படத்தின் முன்னணி நடிகர்களான வசந்தி சதுரானி, அஜித் ஜினதாச, ஷ்யாமா ஆனந்தா , இலங்கையின் முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளராக பரவலாகக் கருதப்படும் சுமித்ரா பெரிஸின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் படம் லெஸ்டர் ஜேம்ஸ் பெரிஸ் மற்றும் சுமித்ரா பெரிஸ் அறக்கட்டளையுடன் இணைந்து எல்’இம்மாஜின் ரிட்ரோவாட்டா ஆய்வகத்தில் உள்ள பிலிம் ஹெரிடேஜ் பவுண்டேஷனால் 4K தரத்தில் மீட்டெடுக்கப்பட்டது. பிரான்ஸ்-இந்தியா-இலங்கை சினி ஹெரிடேஜ் (FISCH) முன்முயற்சியின் கீழ் மானியம் மூலம் இந்த மறுசீரமைப்புக்கு நிதியளிக்கப்பட்டது, இதற்கு இலங்கை, மாலத்தீவு, இந்தியாவில் உள்ள பிரெஞ்சு தூதரகங்கள் ஆதரவு அளித்தன.