காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான, குமரி அனந்தன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்தவர் குமரி அனந்தன். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் என்ற பெருமையை பெற்றவர். அதேபோல் வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிட்டவரை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனை நினைவு கூறும் விதமாக, மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என்ற பெயர் வர காரணமாக இருந்தவர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு இவருக்கு தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். அதேபோல் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தவர். அது மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்று தனது பேச்சாற்றலால் தமிழின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பெருமை இவரையே சாரும்.
93 வயதான இவருக்கு ஒரு மகன் மற்றும் தமிழிசை உட்பட நான்கு மகள்கள் உள்ளனர். வயது மூப்பின் காரணமாக, சிறுநீர் பிரச்சினை பாதிப்பு ஏற்பட்டு கடந்த 4ஆம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மறைந்த இலக்கிய செல்வர் குமரி அனந்தனின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். மகள் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து குமரி அனந்தனின் பெருவாழ்வை போற்றிடும் வகையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.