Tuesday, February 10, 2026 9:57 am
உலகக் கிண்ணப் போட்டியில் யூசிலாந்து அணியை எதிர்கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக, ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அணியின் ஆல்-ரவுண்டர் முகமது ஜுஹைப் ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, அவரை அணியிலிருந்து நீக்கி உடனடியாக வீட்டுக்கு அனுப்ப அந்நாட்டு கிரிக்கெட் சபை உத்தரவிட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை [10] பிற்பகல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த முக்கியமான போட்டிக்கு முன்னதாகவே இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது.
பெப்ரவரி 9ஆம் திகதி வெளியான தகவலின்படி, முகமது ஜுஹைப் அணியின் விதிகளை மீறி ஒழுங்கீனமாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அமீரக கிரிக்கெட் சபை அவரை உலகக்கோப்பை அணியிலிருந்து விடுவித்துள்ளது. அவர் உடனடியாக நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஆனால், அவர் என்ன தவறு செய்தார் என்பது பற்றி குறிப்பிடவில்லை.
22 வயதான முகமது ஜுஹைப், கடந்த மே 2025 இல் அறிமுகமானார். இதுவரை 16 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 303 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 20.20 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 103 ஆகவும் உள்ளது. பெரிதாக ஃபார்மில் இல்லாத வீரர் என்றாலும், உலகக்கோப்பைத் தொடரின் நடுவே ஒரு வீரர் நீக்கப்படுவது அணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜுஹைப் வெளியேறியதால், அவருக்குப் பதிலாக 21 வயதான இளம் வீரர் ஆர்யன்ஷ் சர்மா அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. இவர் கப்டனுடன் இணைந்து இன்னிங்ஸைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

