Tuesday, January 27, 2026 7:19 pm
இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி ஐரோப்பிய கார் நிறுவனங்களுக்கான வரி 110 சதவீதத்தில் இருந்து 40 ஆக குறையும் எனக் கூறப்படுகிறது. இதனால் சொகுசு கார்களின் விலை அதிரடியாக குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பங்கு சந்தையில் இந்திய கார் நிறுவனங்களின் பங்குகள் அதிரடியாக சரிந்தன.
இந்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தால், ஐரோப்பிய கார் நிறுவனங்களுக்கு இந்திய சந்தைகள் தாராளமாக திறந்துவிடப்படும். வோல்க்ஸ்வோகன், ரெனால்ட், மெர்சிடீஸ் பென்ஸ் , பிஎம்டபிள்யூ ஆகிய கார்களுக்கான இறக்குமதி பெருமளவு குறையும். இதனால், இந்த சொகுசு கார்களுக்கு இந்திய சந்தையில் அதிக மார்க்கெட் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது இந்திய கார் சந்தையில் வெறும் 4 சதவீதம் மட்டுமே ஐரோப்பிய கார் நிறுவனங்கள் பிடித்துள்ளன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம், ஐரோப்பிய கார் நிறுவனங்களின் ஆதிக்கம் இந்திய கார் சந்தையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய கார் நிறுவனங்களுக்கு கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது
இந்த நிலையில், பங்குச்சந்தைகளில் இந்திய கார் நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 5 சதவீதம் அளவுக்கு பங்குகள் சரிந்தன. மகிந்திரா & மகிந்திரா, மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிரடியாக சரிவை சந்தித்தன.

