Friday, February 20, 2026 8:38 pm
பூமியில் மனிதர்கள் வசிப்பது போல விண்வெளியில் உள்ள வேறு கிரகங்களில் ஏலியன் என சொல்லப்படும் வேற்றுகிரக வாசி வசிப்பதாக பலரும் நம்புகிறார்கள். இது தொடர்பாக அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. ஏலியன் இருந்தால் அதனுடன் தொடர்பு கொள்ள பல வருடங்களாக ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் இப்போதுவரை அது எந்த பலனும் ஏற்படவில்லை.
ஒருபக்கம் பல வருடங்களுக்கு முன்பே ஏலியன் பூமிக்கு வந்தது.. அதற்கான ஆதாரம் இதுதான் என சொல்லி பல நாடுகளிலும் உள்ள பல புகைப்படங்களை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்கிறார்கள். ஒருபக்கம் ஹாலிவுட்டில் ஏலியன்ஸ் தொடர்பான திரைப்படங்களும் தொடர்ந்து வெளியாகி வருகிறது.. மற்றொரு பக்கம் சில ஏலியன்களை பிடித்து அமெரிக்கா ரகசியமாக ஆய்வு செய்து வருவதாகவும் அவ்வப்போது சில செய்திகளை வெளியாவதுண்டு.
சமீபத்தில் ஏலியன் பற்றி பேசிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஃபாரக் ஒபாமா ‘ஏலியன்கள் இருப்பதாக நான் நம்புகிறேன் அதேநேரம் அவற்றை வைத்து இரகசிய ஆய்வு எல்லாம் அமெரிக்கா நடத்தவில்லை’ என கூறியிருதார். இந்நிலையில் அமெரிக்கா வசம் உள்ள ஏலியன் குறித்த தரவுகள், அடையாளம் தெரியாத வான்வெளி நிகழ்வுகள் (UFO), பொருட்கள் பற்றிய ரகசியங்களை பொதுவெளியில் வெளியிட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவெடுத்திருக்கிறார்.
ஏலியன்ஸ் பற்றிய தரவுகளை இரகசிய பட்டியலில் இருந்து நீக்கி பொதுவெளியில் வெளியிடும் பணியை தொடங்குமாறு அதிகாரிகளுக்கு டிரம்ப் வலியுறுத்தியிருக்கிறார். எனவே, ஏலியன்ஸ் தொடர்பாக அமெரிக்கா இதுவரை என்னவெல்லாம் கண்டுபிடித்தது என்கிற தகவல் விரைவில் வெளிவரும் என தெரிகிறது. இது ஏலியன்ஸ் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் கொடுத்திருக்கிறது.

