இலங்கை ரக்பியின் பதிவை உடனடியாக நிறுத்தி வைக்கும் வர்த்தமானி அறிவிப்பை விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே வெளியிட்டுள்ளார்.
1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் பிரிவு 32 மற்றும் 33 இன் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த இடைநீக்கம், இலங்கை ரக்பிக்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் (ரியர் அட்மிரல்) ஷெமல் பெர்னாண்டோவின் நியமனத்தையும் இரத்து செய்கிறது. அவர் மே 29, 2024 தேதியிட்ட முந்தைய வர்த்தமானியின் (எண் 2386/08) கீழ் நியமிக்கப்பட்டிருந்தார்.
தகுதிவாய்ந்த அதிகாரிக்குப் பதிலாக, இலங்கை ரக்பியின் புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட ஆணையுடன் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழுவை அமைச்சர் நியமித்துள்ளார். இந்த அரசியலமைப்பு உலக ரக்பியால் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு மறுஆய்வுக் குழுவால் தயாரிக்கப்பட்டு அனைத்து பங்குதாரர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
பணிக்குழுவில் அங்கத்தவர்கள்
பிரியந்த ஏகநாயக்க (தலைவர், தேசிய விளையாட்டு கவுன்சில்) – தலைவர்
சுரேஷ் சுப்பிரமணியம் (தலைவர், தேசிய ஒலிம்பிக் குழு)
எம்.ஆர். லத்தீஃப் (ஓய்வு பெற்ற மூத்த டி.ஐ.ஜி.)
டினல் பிலிப்ஸ் (ஜனாதிபதி ஆலோசகர்)
ரோஹன் அபயகோன் (உறுப்பினர், தேசிய விளையாட்டு கவுன்சில்)
புதிய அரசியலமைப்பு பதிவு செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் நிர்வாகிகளை நியமிப்பதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது.
அதுவரை, இலங்கை ரக்பியின் அனைத்து விவகாரங்களையும் நிர்வகிக்க பணிக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.