இந்திய பாகிஸ்தான் போட்டி என்றால் பெரும் பரபரப்பு இருக்கும். ஆசியக் கிண்ணப் போட்டியில் இரண்டு அணிகளும் போட்டி உலகளாவிய ரீதியில் எதிர் பார்க்கப்பட்டது. வீறாப்பு பேச்சுகள், சபதங்கள் என போட்டிக்கு முன்னமேயே பரபரபால் எகிறியது.
கிறிக்கெற் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14ஆம் திகதி துபாயில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடப் போவதாக அறிவித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 127 ஒட்டங்கள் மட்டுமே எடுத்தது. 128 என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 15.5 ஓவர்களில் 3 விக்கெற்களை இழந்து 131 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெற்களால் வெற்றி பெற்றது.
ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே சாய்ம் ஆயுப் கோல்டன் டக் அவுட்டானார். அடுத்து வந்த முகமது ஹரிஸையும் 3 ஓட்டங்களில் வெளியேற்றினார் பும்ரா மற்றொரு துவக்க வீரர் ஃபர்கான் நிதானமாக விளையாடினார்.
ஃபகார் ஜமானை 3 ஓட்டங்களில் அவுட்டாக்கிய அக்சர் படேல் அடுத்து வந்த பாகிஸ்தான் கப்டன் சல்மான் ஆகாவையும் 3 ஓட்டங்களுடன் அனுப்பினார். அடுத்த ஓவரில் ஹசன் நவாஸ் 5, முகமது நவாஸ் 0 ஆகியோர் அடுத்தடுத்து குல்தீப் யாதவ் சுழலில்சிக்கியதால் 12,2 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 64 ஓட்டங்கள் எடுத்தது. மறுபுறம் நங்கூரமாக விளையாடி வந்த ஃபர்ஹானும் 40 (44) ஓட்டங்களில் ஆட்டமிழந்ததுடன் பாகிஸ்தான் ரசிகர்களின் நம்பிக்கை சிதறியது. ஃபஹீம் அஸ்ரப் 11, சுபியன் முஹீம் 10 ஓட்டங்கலுடன் வெளியேறினர்.
சாகின் அப்ரிடி கடைசி நேரத்தில் 4 சிக்சர்களை பறக்க விட்டு 33* (16) பாகிஸ்தான் மானத்தை காப்பாற்றினார். அவருடைய அதிரடியால் தப்பிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 127 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய பந்து வீச்சாளர்களான ஜஸ்ப்ரித் பும்ரா அக்சர் படேல் ஆகியோர் தலா 2, குல்தீப் யாதவ் 3 வருண், பண்டையா ஆகியோர் தலா 1 விக்கெற் எடுத்தனர்.
128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது இந்தியா. சுப்மன் கில் 10 ஓட்டங்களுடனும், திலக் வ்ர்மா, அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களும், ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களும் எடுத்தனர். இந்தியா 15.5 ஓவர்களில் 3 விக்கெற்களை இழந்து 131 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெற்களால் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
நாணயச் சுழற்சியின் பின்னர் இந்திய அனி கப்டன் பாகிஸ்தான் கப்டனுடன் கை குலுக்கவில்லை. ஆரம்பமே சர்ச்சையானது.
பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிப்பு வெளியானதும் அரங்கமே தேசிய கீதத்துக்கு மதிப்புக் கொடுக்கத் தயாராகியது. பாகிஸ்தான் வீரர்கள் நெஞ்சில் கை அகித்தனர். அப்போது தேசிய கீதத்திற்கு பதிலாக ஜிலேபி பேபி பாடல் ஒலிபரப்பாகியது. பாகிஸ்தான் வீரர்கள் குழம்பினர். அரங்கத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சியானார்கள். அடுத்த நொடியில் பாகிஸ்தானின் தேசிய கீதம் ஒலிபரப்பானது.
பும்ராவின் 5 வருட சாதனையை பாகிஸ்தானின் இளம் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், முடிவுக்குக் கொண்டு வந்தார்.
உலக நம்பர் 1 பந்துவீச்சாளரான பும்ராவையே அட்டாக் செய்தார் இளம் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான். பும்ரா வீசிய 4-வது ஓவரின் மூன்றாவது பந்தை, வைட் லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார்.அந்த சிக்ஸரைப் பார்த்து கிறிக்கெற் ரசிகர்கள் வியப்படைந்தனர்.வர்ண்னையாளர்கள் புகழ்ந்து தள்ளினார்கள்.
பும்ரா வீசிய 6-வது ஓவரில் அவர் மீண்டும் ஒரு அதிரடியான புல் ஷாட்டை பேக்வேர்ட் ஸ்கொயர் திசையில் பறக்கவிட்டு இரண்டாவது சிக்ஸரையும் அடித்து, இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தார்..
ஃபார்ஹானின் இந்த இரண்டு சிக்சர்கள் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக இது வரை ஒரு சிக்சர் கூட பும்ரா விட்டுக்கொடுத்ததில்லை என்கிற 5 வருட சாதனையை உடைத்தார் சாஹிப்சாதா ஃபார்ஹான். பாகிஸ்தான் அணி பும்ராவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த முதல் சிக்சர் இதுவாகும். பும்ப்ராவின் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்கள் அடிப்பேன் என சபதம் செய்த முகமட் ஹரிள் பண்டையா வீசிய பந்தை பும்ராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடக் கூடாது என பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இருநாடுகளுக்கு இடையேயான அரசியல் , எல்லை தாண்டிய பிரச்னைகளின் அனல், போடிட்டியின் போது ஆடுகளத்திலும் உணரப்பட்டது.
நாணயச் சுழற்சியின் பின்னர் வழக்கமாக இரு அணிகளின் கப்டன்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். ஆனால், பாகிஸ்தான் கப்டனின் முகத்தை கூட பார்க்காத, இந்திய கப்டன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்க மறுத்து அங்கிருந்து வெளியேறினார்.
தொடர்ந்து, போட்டியின் முடிவிலும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது என்பது மரியாதை நிமித்தமாக பின்பற்றப்படுகிறது. ஆனால், நேற்றைய போட்டியில் இலக்கை எட்டியதுமே, பேட்டிங் செய்து கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே ஆகியோர் நேராக இந்திய பெவிலியனை நோக்கி புறப்பட்டனர். பாகிஸ்தான் வீரர்களும் கைகுலுக்குவதை எதிர்பார்த்து காத்திருக்காமல், பெவிலியனை நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
போடிட்யின்போது கையில் கருப்பு பேட்ஜை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடினர். வெற்றியை இந்திய இராணுவத்திற்கும் பஹால்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் சமர்பிப்பதாக கப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கைகுலுக்காததால் பாகிஸ்தான் கப்டன் பரிசளி விழாவைப் புறக்கணித்தார்.