Monday, May 18, 2026 10:52 am
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் இதனால் எடப்பாடிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எனக்கு பல்வேறு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவில் நடைபெறும் நிகழ்வுகள் மிகுந்த மனவேதனையை உண்டாக்குகிறது. உள்கட்சி சண்டை தொடர்பாக நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவுக்கு அதிமுகவின் நிலை சென்றுவிட்டது. கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளியேற்றம் பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மனவேதனையை உண்டாக்கிவிட்டது. இதே மனநிலையில் தான் இயக்கம் தொடங்கிய நாளில் இருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள். நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை. மாறாக கவலை அளிப்பதாகவே உள்ளது. எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம், ஜெயலலிதா காப்பாற்றிய இந்த இயக்கத்திற்கு இந்த கதியா? கற்பூரம் கரையலாம், கட்சி கரைலாமா! நோகுதய்யா மனசு நோகுதய்யா என்ற உள்மனதின் வெளிப்பாடு எல்லோருக்குமானதே ஆகும்.
“உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது” என பிரபல ஆங்கில் நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவிற்கு நிலைமை போய்விட்டது. புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு அரசியலில் நிலையான ஓர் அங்கீதாரத்தை எனக்கு உருவாக்கித் தந்தார்கள். அந்த நன்றிக்காக மறைந்த அந்த ஆளுமை மிக்க இருபெரும் தலைவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த இயக்கத்திற்கு என் அனுபவம் பயன்பட வேண்டும் என்ற சுயநலமின்றி தொடர்ந்து பணியாற்றி வந்தேன். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு , எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. தடுக்கப்பட்டன. அதை பற்றி கூட நான் கவலைப்படவில்லை. எனது ஆதங்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலைமைக்கு கட்டுப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வந்தேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

