Wednesday, January 14, 2026 10:01 am
யாழிலுள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் நகைகளை திருடிய இளம் பெண் ஒருவரை ஜனவரி 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல நகைக் கடைகளில் ஒன்றில் சுமார் ஒன்றரை வருடம் பணியாற்றிய யாழ்ப்பாணம் புறநகரில் வசிக்கும் இளம் பெண் ஒருவர், 3 மாதங்களுக்கு முன்னர் தனக்கு ஜனவரி 21ஆம் திகதி திருமணம் என்று கூறி பணியிலிருந்து விலகியுள்ளார்.
குறித்த பெண் பணியாற்றிய நகைக் கடையில் சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடியுள்ளார்.
நகைக் கடையில் கணக்கெடுப்பில் சுமார் 2 கிலோ கிராம் தங்க நகைகள் காணாமல் போனமை அறியப்பட்டு ஆராயப்பட்ட போதே விடயம் கண்டறியப்பட்டு யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் நகைக் கடை முகாமைத்துவத்தினால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் இளம் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் திருடப்பட்ட நகைகளை அடகு வைத்தும், விற்பனை செய்தும், நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்துள்ளதாகவும் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.
சான்றுப்பொருள்களை மீட்கும் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

