Wednesday, February 18, 2026 3:26 pm
யுத்தத்தில் காயப்பட்டு ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார், மூர் வீதி பகுதியில் வசிக்கும் குறித்த பெண் தனது குடும்ப வறுமையைப் போக்கவும், சிறு தொழில் செய்யவும் ‘சீட்டு’ முறையில் பணம் கட்டியுள்ளார். ஆரம்பத்தில் கனிவாக நடந்து கொண்ட பெண் குழுக்கள் காலம் செல்ல செல்ல அவர் வாங்கிய பணத்திற்கு சட்டவிரோதமான முறையில் வட்டிக்கு மேல் வட்டி போட்டுஅவரை மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளியுள்ளனர்.
இப் பெண் மற்றும் இவரது குடும்பம் வாடகை வீடு ஒன்றில் உணவகங்களுக்கு சிற்றுண்டிகளை தயாரித்து வழங்கி வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார். தொடர் மிரட்டல்கள், அவமானங்கள் மற்றும் “பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம்” என்ற அச்சுறுத்தல்களுக்கு பயந்து வேறு வழியின்றி கொழும்புக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை குறைந்த விலைக்கு விற்று அந்தப் பணத்தை வட்டி பணத்துக்காக வழங்கியுள்ளார்.
தொடர்ந்தும் அந்த வட்டி கும்பல் அவரைத் துன்புறுத்தி வருகின்றதாகவும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பெண்மணி தற்போது தற்கொலை எண்ணம் தோன்றும் அளவிற்கு விரக்தியில் உள்ளதாக கண்ணீர் மல்க தெரிவிக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது.
பாதிக்கப்பட்ட இப் பெண்ணுக்கும் அவரைப் போன்ற மற்றவர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும், இந்த சட்டவிரோத வட்டி கும்பல்கள் மீது உடனடியாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

