Tuesday, December 30, 2025 4:29 pm
இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் வசிக்கும் கல்வியாளரான பேராசிரியர் நிஷான் கனகராஜாவிற்கு உயரிய பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா (Nishan Canagarajah) 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் நைட் பட்டம் பெற்றுள்ளார்.
பேராசிரியர் கனகராஜா வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்கும் கல்வி ஒரு சக்தியாக இருப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டியுள்ளார்.
இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதல் சிறுபான்மை இன துணைவேந்தராக காணப்படுகின்றார்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ். மார்ட்டின் வீதியில் வளர்ந்தவர். யாழ். பரி. யோவான் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1985ஆம் ஆண்டு அந்தக் கல்லூரியின் தலைமை மாணவ தலைவராகவும் (Head Prefect) திகழ்ந்தவர்.
இலங்கையில் பிறந்து படித்த பேராசிரியர் கனகராஜா, இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். 2019 இல் லெய்செஸ்டரில் துணைவேந்தராக வருவதற்கு முன்பு பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் மூத்த பதவிகளையும் வகித்துள்ளார்.
இவரது சாதனைக்கு தமிழ்தரப்பினர் உட்பட பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

