Wednesday, December 17, 2025 12:30 pm
அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவதற்காக, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மொழிபெயர்ப்பாளர் சேவையில் நிலவும் சம்பளப் பிரச்சினை, தரங்களுக்கு இடையிலான சம்பள முரண்பாடுகள் மற்றும் வெற்றிடங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
கடந்த கால அரசாங்கங்கள் அரச சேவையின் சம்பள உயர்வுகளை முறையான அல்லது தர்க்கரீதியான வழிமுறைகளின்றி மேற்கொண்டதன் காரணமாகவே இவ்வாறான பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன எனவும், சம்பள முரண்பாடுகள் குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஆண்டில் இதற்கான சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் தலைவர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

