Thursday, October 23, 2025 1:58 pm
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் மீண்டும் இணைந்து அரசியலில் செயற்படக்கூடிய ஏற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் இருவரும் விரைவில் சந்திக்கவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேதாசாவை சந்திக்க இணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியாக இணைந்து செயற்படுவதா அல்லது வேறொரு அரசியல் கூட்டணியின் பெயரில் சேர்ந்து செயற்படுவதா என்பது குறித்து இரண்டு தரப்பு உறுப்பினர்களும் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.
மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளையும் இணைத்து வேறொரு புதிய அரசியல் கூட்டணியாக இருங்கும் அதேநேரம், ரணில் – சஜித் என இரண்டாகப் பிளவுபட்டு பாரம்பரியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் ஒரு கட்சியாக இயங்க வேண்டும் என்பது தொடர்பாக முக்கிய உரையாடல்கள் கொழும்பில் இடம்பெறுகின்றன.
குறிப்பாக கொழும்பை மையமாகக் கொண்ட பிரபல வர்த்தக பிரமுகர்கள் மற்றும் கல்வியாளர்கள் பலர் ஒன்றுகூடி ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் ஒன்றுபடுத்தும் நகர்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நகர்வுகளின் பயனாக விரைவில் ரணில் – சஜித் சந்திப்பு இடம்பெறும் எனவும் அச் சந்திப்பின் பின்னர் இருவம் ஒன்றினைந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியாக இயங்குவது பற்றி அறிவிப்பர் எனவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பு சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்படும் எனவும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு வேறொரு முக்கிய பதவி வழங்கப்படும் என்றும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் சஜித் பிரேமதாச தலைமையில் சுமர் 52 உறுப்பினர்கள் வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.