Thursday, December 11, 2025 10:09 am
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலமாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரியை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று புதன்கிழமை சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை செய்து வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 06ஆம் திகதி புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு செல்லாத காரணத்திற்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் அவரை முற்படுத்தியதை அடுத்து நீதிமன்ற உத்தரவில், யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்த வைக்கப்பட்டிருந்த நிலையில் தலையில் காயம் ஏற்பட்டு கடந்த 11ஆம் திகதி முதல் கோமா நிலையில் சிகிசிச்சை பெற்று வருகின்றார்.
இந்தநிலையில் குறித்த இளைஞனின் சகோதரி ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தி தனது அண்ணாவை கடந்த 08ஆம் திகதி வைத்திய சாலையில் சென்று பார்த்த போது “அடித்து போட்டாங்கள் ” என தன்னிடம் சொன்னார் என கூறி இருந்தார்.
தாம் அடிக்கவில்லை. சிறையில் தடுக்கி விழுந்தார் என தெரிவித்த யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகம், இளைஞனின் சகோதரி உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்தார் என அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்று புதன்கிழமை குறித்த பெண்ணை பொலிஸ் நிலையம் அழைத்து சுமார் இரண்டரை மணி நேரமாக விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டனர்.

