Wednesday, February 18, 2026 10:03 am
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக பயணமான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

இந்திய மத்திய இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சௌதரி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் குழுவினால் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த மாநாடு புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 19ஆம் திகதி இம்மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45 ற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

