Thursday, February 5, 2026 12:04 pm
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை இந்த வாரம் ஓமானில் நடைபெறும் என தெஹ்ரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (GMT 06:00) மஸ்கட்டில் காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என அரக்சி அறிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்திப் பேச்சுவார்த்தைகள் காலம் மற்றும் இடம் குறித்த கருத்து வேறுபாடுகளால் கேள்விக் குறியாகியுள்ளதாக முன்னதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் ஈரான் வெளிவிவகார அமைச்சரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
முதலில் திட்டமிட்டபடி துருக்கிக்குப் பதிலாக ஓமானில் ஈரானுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா பங்கேற்கும் என்பதை வொஷிங்டன் உறுதிப்படுத்தியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரை மேற்கொள்காட்டி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் போராட்டக்காரர்கள் மீது ஈரான் நடத்திய வன்முறை அடக்குமுறையைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரபிக் கடலில் படைகளை குவிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தெஹ்ரான் மீது வொஷிங்டன் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் வந்துள்ளன.

