Saturday, December 27, 2025 4:34 pm
முல்லைத்தீவு, சிலாவத்தையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைக்கு மத்திய சுகாதார அமைச்சு தனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சின் விசேட விசாரணை குழு ஒன்றை முல்லைத்தீவுக்கு அனுப்ப உள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தனக்கு அறிவித்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன தெரிவித்தார்.
விசேட நிபுணர்கள் அறுவர் அடங்கிய குழு நேற்று முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்கு சென்று சிறுமியின் மரணம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த 21 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி திடீரென உயிரிழந்துள்ளார். சிறுமிக்கு உரிய முறையில் மருத்துவம் மேற்கொள்ளாமையாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

