Tuesday, December 23, 2025 3:35 pm
இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் விசேட தூதுவராக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து இலங்கை மீளக்கட்டியெழுப்பும் பணிகளை ஆரம்பித்துள்ள இத்தருணத்தில் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் ஓர் அங்கமாகவே இந்தச் சந்திப்பு அமைந்தது.
இக்கலந்துரையாடலின் போது இலங்கையில் புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களை மீளக்கட்டியெழுப்புதல், விவசாயத் துறையைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதை இந்திய வெளிவிவகார அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
வலுவான சட்ட, நிர்வாக மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளின் ஆதரவுடன் பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான வினைத்திறன் மிக்க பொறிமுறைகளைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பினரும் தற்போதைய நிவாரண முயற்சிகளை மீளாய்வு செய்ததுடன், மீட்பு நடவடிக்கைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆராய்ந்தனர்.
‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பின்னரான மீட்புச் செயற்பாடானது உடனடி நிவாரண முயற்சிகளுக்கு அப்பால் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்புதல் போன்ற நீண்டகால நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது எனக் குறிப்பிட்ட பிரதமர் இதன்போது இந்திய அரசு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்காகத் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதன் ஓர் அங்கமாகவே பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார். அனர்த்த நேரத்தின்போது வெளிப்பட்ட மக்களின் ஒற்றுமை, அவர்களின் தன்னார்வத் தொண்டு மற்றும் கூட்டுச் செயற்பாடுகளைப் பாராட்டிய பிரதமர் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம், அனர்த்தங்களுக்குள்ளாகும் தன்மையைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

