Tuesday, December 16, 2025 10:07 am
வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு இன்று செவ்வாய்கிழமை அதிகாலை முதல் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்தவானிலை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடரும் என யாழ். பல்கலைக்கழக புவியல்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ. தென்கிழக்காக அமைவு பெற்றுள்ளது. இலங்கையின் தென் பகுதியை மையம் கொண்டு கீழ் வளிமண்டல தளம்பல் நிலை ஒன்றும் உருவாகியுள்ளது.

இன்று முதல் வடக்கு, கிழக்கு, ஊவா, மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளுக்கு சற்று பலமான அதாவது மணிக்கு 30- 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இந்தக் காற்றுச் சுழற்சி இலங்கைக்கு தென்கிழக்காக நிலவுவதாலும் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என்பதனாலும், இலங்கையின் தென் பகுதியை மையம் கொண்டு கீழ் வளிமண்டல தளம்பல் நிலை நிலவுவதாலும் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் சற்றுக் கனமழை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளில் நிலச்சரிவு அனர்த்தங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையால் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தம் உருவாகும் வாய்ப்புள்ளது.
இலங்கையின் கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு ஆழ்கடற் பகுதிகளுக்கு பலநாட்கலங்களில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளவர்கள் வேகமான காற்று மற்றும் அதிக உயரம் கொண்ட கடலலைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

