Monday, December 15, 2025 3:06 pm
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பிலான குற்றச்சாட்டு மற்றும் பக்கச்சார்பாக செயற்படும் கிராம சேவகர் குறித்து குற்றம்சாட்டிய நபருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. அதனடிப்படையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாகர் கோவில் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தின் கிராம சேவகர் பக்கசார்பாக செயற்படுவதாகவும், பாதிக்கப்பட்ட சில வீடுகளை இதுவரைக்கும் வந்து பார்வையிடவில்லை எனவும் நாகர்கோவில் மக்கள் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த நபருக்கு இனம்தெரியாத நபரால் தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், ஊடகங்களுக்கு கொடுத்த கருத்தினை மீளபெற்றுக்கொள்ளுமாறும் அதனை மறுக்கும் பட்சத்தில் ஆள் வைத்து கொலை செய்ததாகவும் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவராணங்களில் கிராமசேவகர்களின் பக்கச்சார்பு மற்றும் சுயநலத்துடன் கூடிய அக்கறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் அண்மையில் பல குற்றச்சாட்டுகள் ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டுவரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

