Friday, October 24, 2025 3:30 pm
கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி, நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவிய இரண்டு பெண்கள் உட்பட நால்வரையும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி, பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ, சட்டத்தரணி போன்று வேடமணிந்த ஒருவரினால் சுட்டுபடுகொலை செய்யப்பட்டார்.
பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நாட்டை விட்டு தப்பிச் செல்ல அவருக்கு உதவி செய்த இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

