Friday, December 5, 2025 7:52 pm
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ்.மாவட்ட நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இடைக்கால தடை கட்டளையை பிறப்பித்துள்ளது.
இந்த கட்டளையை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு அனுப்பி வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில் உள்ளக விளையாட்டரங்கு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கமைய கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் நாட்டி வைத்தனர்.
இந்தநிலையில் பழைய பூங்காவில் நூற்றாண்டு கால பழமையான மரங்கள் காணப்படும் நிலையில், அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில், பழைய பூங்காவில் அமையவுள்ள விளையாட்டரங்கினை உடனடியாக நிறுத்துமாறு கோரி வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கின் மீதான விசாரணை இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மைதானம் அமைக்கும் பணிகளை உடன் நிறுத்துமாறு 14 நாட்களுக்கு இடைக்கால தடை கட்டளையை வழங்கிய மன்று எதிர்தரப்பினை தமது ஆட்சேபணைகள், பதில்களை முன் வைக்கவும் காலம் வழங்கியுள்ளது.

