Wednesday, December 31, 2025 4:48 pm
இலங்கை அரசியலை பொறுத்தவரை 2025 ஆம் ஆண்டில் பலவிதமான திருப்பங்களும் எதிர்பாராத பலவிடயங்களும் அரங்கேறியுள்ளன.
ஊழல் எதிர்ப்பு மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகளின் கீழ் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
2025ம் ஆண்டில் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய கைது நடவடிக்கைகளாக பின்வருவன காணப்படுகின்றது.
2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச பண மோசடி குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை இலங்கையில் பரபப்பை ஏற்படுத்தியிருந்தது. கைது செய்யப்பட்ட அரசியல்வாதிகள் பிணையில் வருவது வழமையாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இரத்மலானை பகுதியில் சுமார் 34 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணி மற்றும் வீட்டை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டிலே இவர் கைது செய்யப்பட்டார்.

இதேபோன்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அநுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அநுராதபுர பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனின் கைது நடவடிக்கையும் பெரிதளவில் பேசப்பட்டதொரு விடயமாகக் காணப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டு மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை தவிர்க்க முன்பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றத்தில் கோரியிருந்த போதும் அவரது முன்பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
அதேபோன்று மாகாண சபைத் திட்டங்களுக்காக மூன்று அரச வங்கிகளிடமிருந்து அனுசரணை பெற்று அந்த நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
சிவநேசதுரை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையானின் கைது வடக்கு கிழக்கு பகுதிகளில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
கொழும்பில் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக கடமையாற்றிய பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவிந்திரநாத் காணாமல் போயிருந்தார். பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவிந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தின் பின்னணியில் பிள்ளையான் செயற்பட்டுள்ளதாக எழுந்துள்ள சந்தேகத்தை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
மேலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவும் அவர் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.
அடுத்து கெஹலிய ரம்புக்வெல்லவின் கைது அரசியல்பகுதியில் திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
தனது அமைச்சின் கீழ் பணியாற்றுவதாகக் கூறி உண்மையில் பணியாற்றாத தனது அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களுக்கு சுமார் 8 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சம்பளமாக வழங்கியமை மற்றும் கட்சி அலுவலகப் பராமரிப்பிற்காக அரச நிதியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். கெஹலிய ரம்புக்வெல்லவின் கைதினைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர்
இவ்வாறாக 2025ம் ஆண்டில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள் இலங்கை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் கூட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது நாட்டு மக்களிடையேயும் சர்வதேச ரீதியிலும் பெரியதொரு கேள்வியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகக் காணப்பட்டது. இது அநுர அரசாங்கத்தின் மீது மக்கள் மத்தியிலும் சர்வதேச ரீதியிலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
2023 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்தபோது தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகச் லண்டனுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அதேபோன்று 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெறுவதற்காக மற்றொரு பிக்குவை கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் ஊழல் முறைப்பாடுகள் தொடர்பாக அத்துரலியே ரத்தன தேரர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறிருக்க ஆண்டின் கடைசி மாதத்தில் இடம்பெற்ற கைது நடவடிக்கை ஒன்று வடக்கு பகுதியில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கடந்த 26 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதுஷிடம் இருந்து மீட்கப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தார்.

ஒரு அமைச்சருக்கு ஏன் துப்பாக்கி வழங்கப்பட்டது? அது எவ்வாறு பாதாளகுழு உறுப்பினரிடம் சென்றது போன்ற பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த கைது நடவடிக்கை வெறுமனே ஒருவரிடம் மட்டும் நின்று விடாது கடந்த கால அரசியல்வாதிகள், பாதுகாப்பு உறுப்பினவர்கள் போன்றவர்களின் தொடர்பு குறித்தும் பெரியதொரு கேள்வியை உருவாக்கியுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நடத்தப்படும் விசாரணைகளின் அடிப்படையில் பலவாறான சம்பவங்கள் வெளிஉலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிது.

