Tuesday, October 28, 2025 11:33 am
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று திங்கட்கிழமை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அவர்களிடம் மன்னிப்புகோரி உள்ளார்.
இந்த சந்திப்பின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் பிரச்சாரத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததுடன் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் விஜய் சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் 2 பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

