Friday, December 5, 2025 8:24 am
டித்வா புயலால் இலங்கையில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க “கள மருத்துவமனை” ஒன்றை அமைப்பதற்காக ஜப்பானிய மருத்துவர்கள் குழு ஒன்று நாட்டுக்கு இன்று வருகை தந்துள்ளனர்.
இதற்காக ஜப்பானில் இருந்து மருத்துவமனை ஊழியர்கள் உட்பட 41 பேர் கொண்ட குழு அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து இலங்கையுடனான தமது தொடர்ச்சியான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அவசரகால மனிதாபிமான நடவடிக்கைகளை வலுப்படுத்த ஜப்பான் இந்த பேரிடர் நிவாரண மருத்துவக் குழுவை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது இலங்கையின் தற்போதைய அனர்த்த பதிலளிப்பு மற்றும் மருத்துவ உதவி முயற்சிகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.
ஜப்பான் தூதுக்குழுவை விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர். கிரிஷாந்த அபயசேன, வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சவித்திரி பணபோக்க மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன ஆகியோர் உத்தியோகபூர்வமாக வரவேற்றனர்.

இந்த மருத்துவக் குழுவானது தேசிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து களத்தில் முக்கியமான மருத்துவ ஆதரவை வழங்குதல், நிவாரண நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்தல், சூறாவளியால் சுகாதார சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி வழங்குதல் முதலிய பகுதிகளை மேற்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது.

