தமிழக மீனவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும் இன்று சனிகிழமை [22] தங்கச்சிமத்தில் நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த போராட்டக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சித் தலைவர்கள் பங்குபற்றினர்.
இதில் முக்கியமாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோசம் முன்வைக்கப்பட்டது.
இலங்கை கடற்படையினரின் கைதைக் கண்டித்தும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், கச்சதீவை மீட்டு கொடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உரையாற்றினர்.
தமிழக கடலோர பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததான குற்றச்சாட்டை முன்வைத்து தொடர்ச்சியாக கைது செய்யவதும், மீனவர்களை தாக்கி அவர்களது உடமைகளை சேதப்படுத்துவது உள்ளிட்டவை தொடர் கதையாக நடைபெற்று வருகிறது என்று அவர்கள் கூறினர்.
கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்பதே இந்திய அரசு உடனடியாக செய்ய வேண்டியதாகும் என்றும் அவர்கள் அந்த கூட்டத்தில் வலியுறுத்தினர்.
தமிழனாய் பிறந்துவிட்டதற்காக எம் மீனவச்சொந்தங்கள் இலங்கை கடற்படையால் படும் இன்னல்கள் வார்த்தைகளில் சொல்லி மாளக்கூடியதல்ல. நடுக்கடலில் வலை விரித்தால் மீன்களுக்குப் பதிலாக மீனவர் பிடிபடுவது உலகில் தமிழினத்திற்கே நடக்கின்ற கொடுமையாகும். அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடரும் இந்த மனிதப் பேரவலத்திற்கு யார் பொறுப்பு? உலகின் நான்காவது மிகப்பெரிய ராணுவ வலிமையைக் கொண்டுள்ள இந்தியா, இலங்கை கடற்படை தாக்க வரும்போது தடுத்து, இதுவரை ஒரே ஒரு தமிழ் மீனவரை கூடக் காப்பாற்றாதது ஏன்? உலகில் எந்த நாட்டு இராணுவமும் தம் சொந்த நாட்டு மீனவரை இப்படி சுட்டுக்கொல்வதை வேடிக்கைபார்க்குமா? இலங்கை கடற்படையிடமிருந்து நாட்டுக் குடிகளைக் காப்பாற்றத் திறனற்ற இந்தியாவிற்கு எதற்குக் கடற்படை”? என்று சீமான் இந்த கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.